Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச)
சென்னை திருவல்லிக்கேணியில் உலகப் புகழ்பெற்ற பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் தேர்த்திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
டி.பி. கோயில் தெரு வழியாக தேர் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விபத்து நேரிட்டது. சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் கம்பி ஒன்று தேரின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்காரக் குடையில் சிக்கியது.
இதனால் பலத்த சத்தத்துடன் குடை திடீரென சரிந்து விழுந்தது.
நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தால் தேரை இழுத்து வந்த பக்தர்களும், சுற்றி நின்று தரிசனம் செய்து கொண்டிருந்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக கோயில் பணியாளர்களும், காவல்துறையினரும் விரைந்து செயல்பட்டு குடையை அப்புறப்படுத்தினர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தேர் செல்லும் வழித்தடத்தில் உள்ள மின் கம்பிகளின் உயரத்தை முறையாக சரிபார்க்காததே இந்த விபத்துக்கு காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறிது நேர தடங்கலுக்குப் பிறகு, குடை சரி செய்யப்பட்டு தேரோட்டம் மீண்டும் தொடர்ந்தது. எனினும், நூற்றாண்டு பழமையான இந்த திருவிழாவில் நடந்த இந்த அசம்பாவிதம் பக்தர்களிடையே பெரும் வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b