Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
ஜவ்வாது மலையில் அதானி குழுமம் மேற்கொள்ளவுள்ள அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களின் வாழ்விடங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகமும் அதானி ஹைட்ரோ எனர்ஜி போர்டீன் லிமிடெட் நிறுவனமும் கடந்த 2025 நவம்பர் 25-ஆம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்காக 337.452 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாக இருப்பதால் அடர்ந்த வனப்பகுதிகளும், அரிய உயிரினங்களின் வாழ்விடங்களும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜவ்வாது மலையிலிருந்து கிடைக்கும் நீராதாரத்தை நம்பி விவசாயமும், ஏரிகள் மற்றும் கிணறுகளும் இயங்கி வருவதால், இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும், இதற்கு மாற்றாக சூரிய மின்சாரம், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை செயல்படுத்த அதானி குழுமத்துடன் செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P