கோவில் சொத்துகளின் குத்தகை வாடகை விதி திருத்தம் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை, 01 ஜூலை (ஹி.ச) தமிழக கோவில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகளுக்கான குத்தகை வாடகை நிர்ணய விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவ
High court


சென்னை, 01 ஜூலை (ஹி.ச)

தமிழக கோவில்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துகளுக்கான குத்தகை வாடகை நிர்ணய விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், கோவில் சொத்துகளுக்கான குத்தகை வாடகையை நிர்ணயிப்பது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்து, கடந்த ஜனவரி 14 மற்றும் பிப்ரவரி 17 ஆகிய தேதிகளில் இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன.

இந்த அரசாணைகளை எதிர்த்து, டி.ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டப்படி கோவில் சொத்துகளுக்கான குத்தகை வாடகை சந்தை மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் புதிய திருத்தங்கள் மூலம் அரசு வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கோவில்களின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், இந்த திருத்தங்கள் சட்டத்திற்கு புறம்பானவை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் சொத்துக்கள் தொடர்பான குத்தகை விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், அறநிலையத் துறைச் சட்டத்தின் 34 மற்றும் 34-ஏ பிரிவுகளுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முரணானவை எனவும் வாதிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 1963-ஆம் ஆண்டு விதிகளை முழுமையாக ரத்து செய்யாமல், அவற்றுடன் திருத்தங்களை இணைத்து புதிய விதிகள் கொண்டுவரப்பட்டிருப்பது நிர்வாக ரீதியாக குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்கும் என்றும், எனவே அந்த திருத்த விதிகளையும் அதுதொடர்பான அரசாணைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், அரசாணைகளின் அமல்படுத்துதலுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை தரப்பில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ