Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, விதிகளின்படி மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையில், தொழில்நுட்ப உதவியாளர்கள், நூலகர்கள், தட்டச்சர்கள் மற்றும் பதிவாளர் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள், விதிகளின்படி தேவையான தகுதிகளைப் பெறாத நிலையிலும் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், தகுதி பெறுவதற்காக அவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்குக் கூட பணி நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டும், சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது விதிமீறல் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, 17 பேரின் நியமனங்களை ரத்து செய்த நீதிமன்றம், நடைமுறையில் உள்ள விதிகளை முழுமையாகப் பின்பற்றி, நீதிபதிகளின் உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய தேர்வு நடைமுறையை மேற்கொள்ள உத்தரவிட்டது.
மேலும், ஏற்கனவே பணியில் உள்ளவர்களை மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதித்ததால், தகுதியான பிற விண்ணப்பதாரர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டதாகவும், இது பொதுமக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
பணியில் உள்ளவர்கள் தகுதி பெறாதபட்சத்தில், நேரடி ஆட்சேர்ப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற விதியை மீறி, தேவையில்லாமல் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam