Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து குறைந்துள்ளதால், மொத்த நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் நீர் மேலாண்மைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் நிலை ஏற்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும்.
தற்போது இந்த ஏரிகளில் மொத்தமாக 5.878 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. அதாவது, மொத்த கொள்ளளவில் 49.99 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
தற்போது இந்த ஏரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நீர்வரத்து இல்லாததே நீர்மட்டம் குறைய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கோடை காலத்திற்குப் பிறகும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தேவை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், ஏரிகளில் இருந்து தினசரி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பெய்து வந்தாலும், சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் நீர்வரத்து அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக நீரிருப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
எனினும், தற்போதைய இருப்பு உடனடி குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லையென அதிகாரிகள் தெரிவித்தாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை நீர் பயன்பாட்டை சிக்கனமாக நிர்வகிப்பது அவசியம் என நீர்வள நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், பருவமழை குறைவாக இருந்தால், ஏரிகளின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதால், நீர் சேமிப்பு மற்றும் விநியோக மேலாண்மையில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P