எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - வேலுமணி புறக்கணிப்பு
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதிலும்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - வேலுமணி புறக்கணிப்பு


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

மாநிலம் முழுவதிலும் இருந்து மகளிர் அணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மகளிர் அணியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், கட்சியின் மகளிர் அணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை, வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்கவில்லை.

சென்னையில் இருந்தபோதிலும் அவர் கூட்டத்தை புறக்கணித்திருப்பது கட்சி வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பேசிய வேலுமணி, தன்னுடன் உள்ள நிர்வாகிகளுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தார்.

கட்சியில் தனது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக அவர் கருதுவதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில்தான் இன்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாதது முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கட்சியின் முக்கிய கூட்டத்தில் இரண்டு முக்கிய மேற்கு மண்டல தலைவர்கள் கலந்து கொள்ளாதது, அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் தலைதூக்கியிருப்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b