நில அளவீட்டில் DGPS தொழில்நுட்பம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விளக்கம் கேட்டு உத்தரவு
மதுரை, 01 ஜூலை (ஹி.ச.) வருவாய்த் துறையில் பாரம்பரிய டேப் (Tape) அளவீட்டு முறைக்கு பதிலாக, DGPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து நில அளவீட்டு மற்றும் வருவாய் வரைபடங்களில் அகலாங்கு, தீர்க்கரேகை ஒருங்கிணைப்பு விவரங்களை கட்டாயமாக இணைக்கக் கோரிய பொத
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 01 ஜூலை (ஹி.ச.)

வருவாய்த் துறையில் பாரம்பரிய டேப் (Tape) அளவீட்டு முறைக்கு பதிலாக, DGPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து நில அளவீட்டு மற்றும் வருவாய் வரைபடங்களில் அகலாங்கு, தீர்க்கரேகை ஒருங்கிணைப்பு விவரங்களை கட்டாயமாக இணைக்கக் கோரிய பொதுநல வழக்கில், தமிழக வருவாய்த் துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்சர்தீன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சொத்து வாங்குதல், உட்பிரிவு, பட்டா மாற்றம், FMB திருத்தம் உள்ளிட்ட அனைத்து நில அளவீட்டு பணிகளிலும் தற்போது டேப் மூலம் அளவிடும் முறையே பின்பற்றப்படுவதாகவும், அதனால் நிலத் தகராறுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், DGPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து நில அளவீட்டு வரைபடங்களிலும் அகலாங்கு மற்றும் தீர்க்கரேகை ஒருங்கிணைப்பு (Geographical Coordinates) விவரங்களை கட்டாயமாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, உரிமையியல் வழக்குகளில் இதுபோன்ற புவியியல் அளவீடுகள் அவசியமாக கோரப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதேவேளையில், இந்த நடைமுறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப வசதிகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் நிதி ஆதாரம் அரசிடம் உள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்தனர்.

அறிவியல் யுகத்தில் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம்.

இருப்பினும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான அரசின் தயார்நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக வருவாய்த் துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam