Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் இளைஞர், இளம்பெண் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் தளப் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பிரியதர்ஷிணியும் நட்புடன் பழகி வந்த நிலையில், இருவரும் அப்பகுதியில் உள்ள தோப்பில் அமைந்திருந்த கொட்டகையில் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்திற்கு முன்பாகவே பெண்ணைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததோடு, இருவரையும் வேறு இடத்துக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நம்பிக்கை அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட சிலர் மீது காவல்துறை SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தனது பதிவில் கருத்து தெரிவித்த பா. ரஞ்சித், “தமிழகத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெற்று வருவது கவலைக்குரியது.
இத்தகைய குற்றங்களைத் தடுக்க மாநில அரசு தனிச்சிறப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பவத்திற்கு முன்பாக உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் காவல்துறையில் புகார் அளிக்க முயன்றபோதும் அது ஏற்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அதுகுறித்தும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதி அடிப்படையிலான ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ