அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்
தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.) அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப
அமைச்சர் சிவசங்கர்


தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.)

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரை நேரில் சந்தித்ததாகவும், நீங்கள் கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது.

வேலை வாங்கித் தருகிறேன் என நம்பிக்கை அளித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பலமுறை முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செல்போன் மூலம் தொடர்புகொண்டு நம்பிக்கை ஏற்படுத்தியதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளஞ்செழியன், முன்னாள் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோருக்கு தனது தாய் நெருக்கமானவர் என்றும், முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் ஆசிரியர் தான் தனது தாய் என்றும் கூறி பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை ஏற்படுத்தி பணம் பெற்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், பலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளஞ்செழியன் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் காவல்துறை விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் தனது உதவியாளர் அல்ல என்றும், அவருடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஏற்கனவே சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், புகார்தாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சிவசங்கரின் பெயர் இடம்பெற்றுள்ளதால், விசாரணைக்காக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam