Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர், 01 ஜூலை (ஹி.ச.)
அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தனோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மன்ஜித், நேற்று காலை தனது 4 வயது மகன் நிர்வேர் சிங்கை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது தோட்ட வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில், அருகில் விளையாடிக்கொண்டிருந்த நிர்வேர் சிங், மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அதற்குள் தவறி விழுந்தான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மன்ஜித் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக அவனை மீட்க முயன்றனர்.
ஆனால் சுமார் 220 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த சிறுவனை அவர்களால் வெளியே கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து காலை 7.30 மணியளவில் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர மீட்புப் பணியை தொடங்கினர். தொடர்ந்து பல்வேறு எந்திரங்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் உதவியுடன் நடைபெற்ற மீட்புப் பணி சுமார் 21 மணி நேரம் நீடித்தது.
இறுதியாக இன்று அதிகாலை 3.40 மணியளவில் நிர்வேர் சிங் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வெளியே மீட்கப்பட்டான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு துணை கமிஷனர் அஜய் தோமர் சிங் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA