மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்
சென்னை, 01 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் விதிமுறைகளை மீறி கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த
பிரேமலதா விஜயகாந்த்


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் விதிமுறைகளை மீறி கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விதிமுறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, எம்.பி.பி.எஸ். (MBBS) படிப்புக்கு நான்கரை ஆண்டுகள் கல்விக்காலத்திற்கே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், 5 அல்லது 5.5 ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், சில மருத்துவக் கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதாகக் கூறப்படுவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதோடு, விதிமுறைகளுக்கும் முரணானது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, நான்கரை ஆண்டுகள் மட்டுமே கல்விக்காலம் இருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மருத்துவக் கல்வித் துறை மற்றும் அதனைச் சார்ந்த அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாகக் கண்காணித்து, இனி எந்த மருத்துவக் கல்லூரியிலும் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெறாத வகையில் கடுமையான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam