பெட்ரோல்-டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் -இன்று முதல் அமல்
புதுடெல்லி , 01 ஜூலை (ஹி.ச.) நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தற்காலிக கட்டுப்பாடுகளையும் இன்று (புதன்கிழமை) முதல் நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் வினியோக நிலை சீரடைந்த
A


புதுடெல்லி , 01 ஜூலை (ஹி.ச.)

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தற்காலிக கட்டுப்பாடுகளையும் இன்று (புதன்கிழமை) முதல் நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் வினியோக நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வளைகுடா பகுதியில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது.

இதன் காரணமாக பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரித்ததுடன், சில பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் நிலவியது. இதையடுத்து, நாட்டில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த ஜூன் 12-ந்தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

அதன்படி, சில்லறை பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் டேங்கில் மட்டுமே டீசல் நிரப்ப வேண்டும் என்றும், ஒரு வாடிக்கையாளருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

மேலும் தொழில், வர்த்தகம் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் 90 நாட்கள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வளைகுடா பகுதியில் போர் பதற்றம் தணிந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து மீண்டும் சீரடைந்ததன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்களின் வினியோகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இதையடுத்து நாட்டின் தற்போதைய வினியோக நிலவரத்தை ஆய்வு செய்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம், ஜூன் 12-ந்தேதி வெளியிடப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவை இனி தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்தது.

இதுதொடர்பாக அமைச்சகம் நேற்று வெளியிட்ட உத்தரவில்,

பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையை தற்காலிகமாக ஒழுங்குபடுத்துவதற்காக ஜூன் 12-ந்தேதி வெளியிடப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுவதாகவும், அந்த உத்தரவு ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து தற்காலிக கட்டுப்பாடுகளும் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA