Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 01 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரொக்கமாக ஒரு கோடியே 40 ஆயிரத்து 575 ரூபாய் (ரூ.1,00,40,575) கிடைத்துள்ளது. மேலும், 187.200 கிராம் தங்கம், 4,035 கிராம் வெள்ளி மற்றும் 255 வெளிநாட்டு நாணயங்கள்பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி திருக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதுகாப்பு நடைமுறைகளுடன் எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி, நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், கோவில் அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், நாதஸ்வரப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணும் பணியை மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந்த பணிகள் நடைபெற்றன.
இன்றைய உண்டியல் வருமானத்துடன் சேர்த்து, நடப்பு பசலி ஆண்டு 1435-க்கான மொத்த உண்டியல் வருமானம் ரூ.61,21,95,387 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வரலாற்றில் ஓராண்டில் கிடைத்த அதிகபட்ச உண்டியல் வருமானம் என்ற புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, பசலி ஆண்டு 1434-ல் ரூ.58,28,51,525 உண்டியல் வருமானம் கிடைத்திருந்தது. அந்த சாதனையை இந்த ஆண்டு முறியடித்து, ரூ.2,93,43,862 கூடுதலாக உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பழனி திருக்கோவிலின் உண்டியல் வருமானம் ஆண்டுதோறும் உயர்ந்து வருவதுடன், பக்தர்களின் காணிக்கை செலுத்தும் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது தெளிவாகியுள்ளது.
பழனி முருகன் மீது பக்தர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி, நம்பிக்கை மற்றும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது போன்ற காரணங்களால் உண்டியல் வருமானம் ஆண்டுதோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது என கோவில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பக்தர்கள் அளிக்கும் இந்த காணிக்கைகள் திருக்கோவிலின் பராமரிப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு, அன்னதானம், கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓராண்டில் ரூ.61 கோடிக்கும் அதிகமான உண்டியல் வருமானம் பதிவாகியுள்ளது பழனி திருக்கோவில் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN