Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்) ஆனி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த ஜூன் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை என பல்வேறு வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் ஒரு பகுதியாக சிம்ம வாகனம், கருட சேவை, சூரிய பிரபை, சந்திர பிரபை, நாச்சியார் திருக்கோலம், யோக நரசிம்மர் திருக்கோலம், அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகன சேவைகள் நடைபெற்றன.
குறிப்பாக 27-ஆம் தேதி நடைபெற்ற கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நரசிம்மர் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு மாட வீதிகள் முழுவதும் பெண்கள் வண்ணமயமான கோலங்கள் தீட்டி, நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி பெருமாளை வரவேற்றனர்.
பக்தர்களின் கோவிந்தா, நரசிம்மா என்ற பக்தி முழக்கங்களால் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் பக்தி பரவசம் நிலவியது.
விழாவையொட்டி பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்யும் வகையில் சென்னை காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
போக்குவரத்து மாற்றங்களும் அமல்படுத்தப்பட்டு, தேரோட்டம் அமைதியான முறையில் நிறைவடைந்தது.
Hindusthan Samachar / GOKILA arumugam