Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 01 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் ‘விபி ஜிராம் ஜி’ என்ற பெயரிலான 125 நாள் வேலை உறுதித் திட்டம் இன்று, ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள 125 நாள் வேலைத்திட்டத்தை எதிர்த்து, மாற்றுத்திறனாளிகள் தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றுகூடி, மத்திய அரசின் புதிய வேலைத்திட்ட சட்ட நகலை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கையாக, 125 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
தற்போதைய திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உடல்நிலை மற்றும் பணித்திறன் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், இது அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், வேலைத்திட்டத்தில் ஊதிய உயர்வு, பணி நேரத்தில் தளர்வு, பணியிட வசதிகள் உள்ளிட்ட அம்சங்களையும் உள்ளடக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற இந்த போராட்டங்கள் மூலம், மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றுத்திறனாளிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b