Enter your Email Address to subscribe to our newsletters

ராஜஸ்தான், 01 ஜூலை (ஹி.ச.)
ராஜஸ்தான் மாநிலம் தௌசா (Dausa) மாவட்டத்தில் டெல்லி–மும்பை விரைவுச்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 22 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோல்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனாவடா பகுதியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை இந்த விபத்து நிகழ்ந்தது.
ரிஷிகேஷில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூருக்கு பயணித்துக் கொண்டிருந்த ஹன்ஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் பயணிகள் பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் தாக்கத்தால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து பேருந்தின் பின்பகுதியில் திடீரென தீப்பற்றி, சில நிமிடங்களில் முழு பேருந்தும் தீயில் கருகியது. லாரியும் தீப்பிடித்து எரிந்ததால் சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் பேருந்தில் சிக்கி தீயில் கருகி உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் தலையில் பலத்த காயம் அடைந்ததால் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு தௌசா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் தீக்காயம் அதிகம் ஏற்பட்ட சிலர் மேல் சிகிச்சைக்காக உயர்நிலை மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தௌசா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீக்ஷித் கூறுகையில்,
ரிஷிகேஷில் இருந்து இந்தூருக்கு சென்ற பேருந்து, முன்னால் சென்ற லாரியின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P