சாத்தங்குடி காதல் ஜோடி உயிரிழப்பு - அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
மயிலாடுதுறை, 01 ஜூலை (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ப
உயிரிழப்பு


மயிலாடுதுறை, 01 ஜூலை (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

புதுப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (19) மற்றும் சாத்தங்குடியைச் சேர்ந்த சிறுமி வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 29-ஆம் தேதி, சிறுமியின் உறவினர்கள் தன்னை ஜாதிப் பெயர் கூறி தாக்கியதாக பார்த்திபன் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, ஜூன் 30-ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை புகார் அளித்த நிலையில், போலீசார் தேடுதல் நடத்தியபோது இருவரும் கீற்று கொட்டகையில் தனித்தனியாக தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர்.

இருவரின் உடல்களும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.

சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், பார்த்திபனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஸ்டாலின் நேரில் பங்கேற்று விளக்கம் அளித்தார்.

அரசு தரப்பில், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான மரணம் வழக்கை உடனடியாக கொலை வழக்காக மாற்ற இயலாது என்றும், பார்த்திபனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, அதில் தேவையிருப்பின் உடனடியாக வழக்கின் பிரிவுகள் மாற்றப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பார்த்திபனின் உடலை நிபந்தனைகளுடன் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும், உடற்கூறு ஆய்வின்போது அவர்கள் நியமிக்கும் இரண்டு மருத்துவர்களை அனுமதிக்க வேண்டும், முழு பிரேதப் பரிசோதனையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam