Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 01 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மூணாங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் சமூக நீதித் துறைக்குச் சொந்தமான மாணவர் விடுதியில் தரமான உணவு வழங்கப்படவில்லை என மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்ட நல அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விரிவான விசாரணை நடத்தினார்.
விசாரணையில், விடுதியில் உணவின் தரம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வந்த சமையலர் சீனிவாசன் உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை விடுதி வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மேலும், மாணவர்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்குவதில் தடை ஏற்படாமல் இருக்க, மல்லூர் பகுதியில் உள்ள சமூக நீதி விடுதியில் பணியாற்றி வந்த சமையலர் ராஜமாணிக்கம், மூணாங்காடு விடுதிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் உடனடியாகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக நீதித் துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b