Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 01 ஜூலை (ஹி.ச.)
கடலூரில் இருந்து விருதாச்சலம் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று இரவு 9 மணியளவில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, வடலூர் பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டபோது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகையில், பேருந்து நின்ற சில நொடிகளிலேயே எஞ்சின் பகுதியில் இருந்து புகை கிளம்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதாக தெரிவித்தனர்.
அபாயத்தை உணர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக சுதாரித்து பயணிகள் அனைவரையும் அவசரமாக கீழே இறக்கினர். பயணிகள் பதற்றத்துடன் வெளியேறியதால் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
தீயின் உக்கிரம் காரணமாக சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும், தீ அருகில் இருந்த நான்கு கடைகளுக்கும் பரவியதால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வடலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்ததோடு, நான்கு கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும், பயணிகள் அனைவரும் முன்கூட்டியே பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
ஒருசில பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து காரணமாக வடலூர் நான்கு முனை சந்திப்பில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடலூர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்ததுடன், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் பேருந்தின் தகுதிச் சான்று மற்றும் பராமரிப்பு குறித்து தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b