Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 01 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கழிப்பறை கட்டணம் என்ற பெயரில் அதிகப்படியான பணம் வசூலிக்கப்படுவதாகவும், அடாவடியாக பணம் பறிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த முக்கிய பேருந்து நிலையத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதோடு, கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களிடம் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை நேற்று நள்ளிரவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பயணிகளைப் போல சாதாரண உடையில் வந்த அவர், கழிப்பறை பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கட்டண வசூல் முறை மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது ஒருசில ஒப்பந்த ஊழியர்கள் அரசு நிர்ணயித்த கட்டணமான ரூ.5-க்கு பதிலாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலித்தது கண்டறியப்பட்டது. பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதையும் அவர் நேரில் கண்டார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ கல்லாணை,
பொதுமக்களின் அடிப்படை உரிமையான கழிப்பறை வசதியில் கூட கொள்ளையடிப்பது கண்டனத்துக்குரியது. இது பகல் கொள்ளை. இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள், குழந்தைகள், முதியவர்களிடம் அடாவடி வசூல் நடக்கிறது.
இதற்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கட்டண விவர பலகையை அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும்.
இதுகுறித்து சட்டமன்றத்திலும் குரல் எழுப்புவேன் என்றும், மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க உள்ளளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த திடீர் ஆய்வால் பேருந்து நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / vidya.b