Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி தொடர்வதற்கு ஆதரவு அளித்து வரும் அரசியல் கட்சிகள், த.வெ.க தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தள பதிவில்,
கூட்டணியை உறுதிப்படுத்தும் முன் மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக த.வெ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள விவகாரங்களில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வருவதாக கூறப்படும் CIRA மசோதா, முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான விவகாரம், CBSE பள்ளிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் திணிப்பு குறித்த குற்றச்சாட்டுகள், பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை, தற்காலிக தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் மற்றும் மேகதாது திட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உள்ளடக்கிய குறைந்தபட்ச செயல்திட்டத்தை கூட்டணிக் கட்சிகள் உருவாக்க வலியுறுத்துமா அல்லது த.வெ.க அரசு மற்றும் கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்குமா என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், திமுக கூட்டணியில் இருந்தபோது கடைப்பிடித்த கொள்கை உறுதியை இக்கட்சிகள் தொடருமா அல்லது தங்களது கொள்கைகளை கைவிடுமா என்றும் அவர் விமர்சன ரீதியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது பாஜகவின் “நிழல் ஆட்சி” எனக் கூறியுள்ள அப்பாவு, இதனை கூட்டணிக் கட்சிகள் உணர்வார்களா என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ