Enter your Email Address to subscribe to our newsletters

இட்டாநகர், 01 ஜூலை (ஹி.ச.)
அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கீயி பன்யோர் மாவட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் லேகு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அசாமின் ஜோனை பகுதியில் கடும் வெள்ளம் சூழ்ந்தது.
100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் நீரில் மூழ்கியுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை 515-ம் வெள்ளத்தில் மூழ்கியதால், அசாம் - அருணாச்சலப் பிரதேசம் இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.
இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ மற்றும் சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.
மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்திய திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் கடுமையான வானிலையால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடும் பரந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இவர்களது வருகை அமைந்தது.
ஆய்வின் போது, அமைச்சர்கள் சேதத்தின் அளவை நேரில் பார்வையிட்டு, பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜூ, ஒரே இரவில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழையால் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் முழு உதவியும் வழங்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b