Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 ஜூலை (ஹி.ச.)
மத்திய அரசின் VB-G RAM G திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தத் திட்டம் கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கியமான முன்னெடுப்பு என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டதும், தினசரி ஊதியம் அதிகரிக்கப்பட்டதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், வறுமைக் கோட்டிலிருந்து மக்களை மீட்கும் உன்னதத் திட்டமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அறுவடைக் காலம் முடிந்து அடுத்த நடவுக்காலம் தொடங்கும் வரை கிராமப்புற மக்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்வதுடன், ஊருணிகள் மற்றும் குளங்களை தூர்வாருதல், சாலைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மூலம் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய கிராமப்புற வளர்ச்சியில் இத்திட்டம் முக்கிய மைல்கல்லாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், டிஜிட்டல் வருகைப் பதிவு, வங்கிக் கணக்குகள் மூலம் நேரடி ஊதியப் பரிமாற்றம் உள்ளிட்ட வெளிப்படையான நடைமுறைகளுடன் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P