சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரம் தொடர் மின்வெட்டு - பொதுமக்கள் அவதி
சென்னை, 10 ஜூலை (ஹி.ச.) சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி பகுதியில் கடந்த 13 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று இரவு முதல் திடீரென மின்தடை ஏற்பட்ட நிலையில், இன்று காலை வரை மி
சென்னை தேனாம்பேட்டை 13 மணி நேரம் தொடர் மின்வெட்டு -  பொதுமக்கள் அவதி


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)

சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி பகுதியில் கடந்த 13 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு முதல் திடீரென மின்தடை ஏற்பட்ட நிலையில், இன்று காலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர் மின்வெட்டால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெப்பம் மற்றும் கொசுத்தொல்லையால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்ததாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

மேலும், வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் இயங்காததால் அன்றாட பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. குடிநீர் மோட்டார் இயக்க முடியாததால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்வோர் மற்றும் மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புகாருக்கு முறையான பதிலும் கிடைக்கவில்லை எனவும், மின்வாரியத்தின் அலட்சியப் போக்கு தொடர்வதாகவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

13 மணி நேரத்தைக் கடந்தும் மின்சாரம் சீராகாத நிலையில், உடனடியாக மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எல்லையம்மன் காலனி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b