சென்னை திருவொற்றியூரில் 7 மணி நேரம் தொடர் மின்வெட்டு - பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை, 10 ஜூலை (ஹி.ச.) சென்னை திருவொற்றியூர் 14-வது வார்டுக்கு உட்பட்ட தியாகராயபுரம் மற்றும் தாங்கல் பகுதிகளில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு வரை சுமார் 7 மணி நேரம் தொடர்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நேற்று மாலை
சென்னை திருவொற்றியூரில் 7 மணி நேரம் தொடர் மின்வெட்டு - பொதுமக்கள் சாலை மறியல்


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)

சென்னை திருவொற்றியூர் 14-வது வார்டுக்கு உட்பட்ட தியாகராயபுரம் மற்றும் தாங்கல் பகுதிகளில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு வரை சுமார் 7 மணி நேரம் தொடர்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நேற்று மாலை 5 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் சீராகாததால், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் இருளில் தவித்தனர். கடும் வெப்பம், கொசுத்தொல்லை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் இருக்க முடியாமல் மக்கள் தெருக்களில் கூடினர். மின்விசிறி, விளக்குகள் இயங்காததால் அன்றாட பணிகள் முற்றிலும் முடங்கின.

மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள், ஆத்திரமடைந்து வள்ளலார் நெடுஞ்சாலையில் திரண்டனர்.

சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்தடைக்கான காரணம் குறித்து விளக்கமளித்து, உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b