சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை - அமைச்சர்களுக்கு சந்திரபாபு அறிவுரை
அமராவதி, 10 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சமூக ஊடகங்களில் அரசையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் குறிவைத்து பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் குற
A


அமராவதி, 10 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சமூக ஊடகங்களில் அரசையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் குறிவைத்து பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர்கள், சமூக ஊடகங்களில் வெளியாகும் அவதூறு வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றாலும், பொய்யான தகவல்களை பரப்புவது, உண்மைகளைத் திரித்துக் கூறுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அமைச்சரவை உத்தரவிட்டது.

மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பான சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கவும், தேவைப்பட்டால் வெளிப்புற நிபுணர்களின் சேவையைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதுபோன்ற வழக்குகளை திறம்பட நடத்த புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு,

மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்த வகையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், எம்.எல்.ஏ.க்களை திட்டமிட்டு தூண்ட முயற்சி நடக்கிறது.

எந்தச் சூழலிலும் அவர்களின் வலையில் சிக்காமல், பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்டங்களுக்கு செல்லும் பொறுப்பு அமைச்சர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ.க்களுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, வருவாய் தொடர்பான பிரச்சினைகள் மட்டுமின்றி, மக்களின் அன்றாட குறைகளுக்கும் முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA