மின்சார வாகன கிளஸ்டர் 30 கி.மீ.க்கு ஒரு சார்ஜிங் நிலையம் அமைக்கப்படும் - கொரிய நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய அமைச்சர் லோகேஷ் அழைப்பு
சியோல் , 10 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தை நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்தி மையமாக மாற்ற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா
A


சியோல் , 10 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தை நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்தி மையமாக மாற்ற மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

தென் கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், சியோலில் கொரியா ஆட்டோ தொழில்துறை ஒத்துழைப்பு அமைப்பின் (KAICA) தலைவர் டேக்-சுங் லீ தலைமையில் நடைபெற்ற வட்டமேசை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, மாநில அரசின் 'சஸ்டெயினபிள் எலக்ட்ரிக் மொபிலிட்டி பாலிசி 4.0' திட்டத்தின் கீழ் விரிவான மின்சார வாகன சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதில் கொரிய நிறுவனங்கள் பங்கேற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மாநிலத்தில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சிறப்பு மின்சார வாகன கிளஸ்டர் அமைக்கப்பட உள்ளது.

மேலும், கிரீன் காரிடார்களில் ஒவ்வொரு 30 கிலோமீட்டருக்கும் ஒரு சார்ஜிங் நிலையம் நிறுவப்படும். ஆந்திரப் பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (APSRTC) அனைத்து பேருந்துகளும் படிப்படியாக மின்சார பேருந்துகளாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் காந்தங்கள் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநிலத்தில் ரேர் எர்த் காரிடார் அமைக்கப்படும் என்றும் லோகேஷ் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்கனவே கியா, அசோக் லேலண்ட், இசுசு, ஹீரோ மோட்டோகார்ப், அமரராஜா, அப்போலோ டயர்ஸ், பாரத் ஃபோர்ஜ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், அசோக் லேலண்ட் ரூ.2,500 கோடி முதலீட்டில் லித்தியம்-அயன் மின்சார பேருந்து உற்பத்தி ஆலையை அமைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரிய நிறுவனங்களுக்காக கியா தொழிற்சாலை அருகிலும், ஸ்ரீசிட்டி–சித்தூர்–திருப்பதி தொழில் வழித்தடத்திலும் தலா ஒரு சிறப்பு ஆட்டோ காம்போனென்ட் பூங்கா அமைக்கப்படும் என்றும், அவற்றில் பிளக்-அண்ட்-பிளே தொழிற்சாலை வசதிகள், சோதனை மையங்கள் மற்றும் தனி 'கொரியா டெஸ்க்' ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மின்சார வாகனத் துறைக்குத் தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்க, மாநிலத்தின் 250-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து சிறப்பு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA