Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 10 ஜூலை (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முதலமைச்சர் விஜயின் சமீபத்திய பேச்சுகளுக்கு கடுமையாக பதிலளித்தார்.
முதலமைச்சரின் பேச்சில் கண்ணியமும், எதிர்க்கட்சிகளை அரவணைக்கும் அணுகுமுறையும் இருக்க வேண்டும் என்ற அவர்,
பட்டாக்கத்தி, கத்தாக்கத்தி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது பதவிக்கேற்றது அல்ல என்றார். அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானவை என்றும், தற்போதைய வெற்றி நிலையானதா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்டார்.
கரூர் சம்பவம் தொடர்பாக திமுக மீது முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
அந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், அதில் யார் காரணம் என்பதை சிபிஐயே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வதை தடுக்க கதவுகளை மூட வேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த அவர், வெளிநடப்பு செய்வது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமை என்றும், சபாநாயகருக்கு கதவை மூடி உறுப்பினர்களை தடுக்க அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
இந்த அரசின் விஸ்வரூபத்தை இனிமேல்தான் பார்ப்பீர்கள் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த துரைமுருகன்,
காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆட்சியையும் பார்த்துள்ளோம்.
இவருடைய விஸ்வரூபம் என்ன என்பதை காலம் காட்டும் என்றார்.
அதிமுக, திமுக ஆகியவை கூட்டு களவாணிகள் என முதலமைச்சர் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு,
அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேச விரும்பவில்லை என்றும், தனது அரசியல் பயணம் வேறு, அவருடைய அரசியல் பயணம் வேறு என்றும் பதிலளித்தார்.
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில், தற்போதைய அரசு பிரச்சினையின் அடிப்படையை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றும், காவிரி நீர் திறப்பு குறித்து தேவையான புரிதல் இல்லாமல் கருத்து தெரிவிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேகதாது வழக்கில் யார் முறையாக வாதாடவில்லை என்பது குறித்து சட்டப்பேரவையிலேயே தங்களது உறுப்பினர்கள் விளக்கமளிப்பார்கள் என்றும் கூறினார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கிய விவகாரம் குறித்து, அதில் இருவிதமான கருத்துகள் நிலவுவதால் தாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
மேலும், கொத்து பரோட்டா குறித்து முதலமைச்சர் விஜய் பேசிய கருத்து தொடர்பாக கேட்கப்பட்டபோது,
சாலையோர அசைவக் கடை விமர்சகர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று துரைமுருகன் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam