Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 10 ஜூலை (ஹி.ச.)
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், 2022 செப்டம்பர் 28-ஆம் தேதி, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உபயதாரர் நிதி மற்றும் கோயில் நிதியின் மூலம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகளுக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தின் கீழ் வரிசை முறை வளாகம், காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடி காணிக்கை மண்டபம், அன்னதானக்கூடம், சுகாதார வளாகங்கள், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டன.
இதில் முதல் கட்டமாக ரூ.33.25 கோடி செலவில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம் உள்ளிட்டவை 2024 அக்டோபர் 14-ஆம் தேதி முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
இரண்டாம் கட்டமாக ரூ.10.57 கோடி மதிப்பில் 52 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்பட்டு, சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், முன்பு ரூ.29.16 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு முழுமை பெறாமல் இருந்த பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிடப் பணிகளை நிறைவு செய்ய கூடுதலாக ரூ.19.20 கோடி ஒதுக்கப்பட்டு, மொத்தம் ரூ.48.36 கோடி செலவில் புதிய விடுதி கட்டி முடிக்கப்பட்டது.
இந்த புதிய விடுதி இரண்டு தளங்களில் 99,925 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதிகளுடன் 100 இருவர் தங்கும் அறைகள், 9 கட்டில்கள் கொண்ட 16 அறைகள், 7 கட்டில்கள் கொண்ட 12 அறைகள், ஹால் மற்றும் இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய 20 குடும்ப குடில்கள், சமையல் அறையுடன் கூடிய உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது ‘யாத்ரீ நிவாஸ்’, ‘குமரன் விடுதி’, ‘ஆறுமுகம் விடுதி’, ‘செந்திலாண்டவர் விடுதி’ என பெயரிடப்பட்ட இந்த விடுதிகளில் ஒரே நேரத்தில் சுமார் 500 பக்தர்கள் தங்கும் வசதி உள்ளது. இருவர் தங்கும் அறைக்கு ரூ.500, ஏசி அறைக்கு ரூ.750, 10 பேர் தங்கும் டார்மிட்டரிக்கு ரூ.1,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்பதிவு கோயில் அலுவலகத்தில் நேரடியாகவும், விரைவில் இணையதளம் வழியாகவும் செய்ய ஏற்பாடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், முதல் கட்ட விடுதிகள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், இரண்டாம் கட்டமாக கட்டப்பட்ட விடுதிகள் இன்னும் முழுமையாக பக்தர்களுக்கு திறக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கிலும், விசேஷ நாட்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தரும் திருச்செந்தூரில், தங்கும் வசதி பற்றாக்குறை நிலவுகிறது.
கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் போன்ற பெருவிழாக் காலங்களில் பக்தர்கள் கடற்கரையிலும், வெளிப்புறங்களிலும் தங்க வேண்டிய நிலை உள்ளது. சமீபத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கடற்கரையில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஏற்கெனவே திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள தங்கும் விடுதிகளை உடனடியாக பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பெரும் நிம்மதி கிடைக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b