முதல்வர் விஜய் பயணிக்கும் வழியில் ஓட்டுநர் இல்லாமல் நின்ற லாரி - திருச்சியில் பரபரப்பு
திருச்சி, 10 ஜூலை (ஹி.ச) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் செல்கிறார். கரூரில் முதல்வர் விஜய் 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ செல்கிறார். இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் வா
Driverless lorry found parked on Chief Minister Vijay's route


திருச்சி, 10 ஜூலை (ஹி.ச)

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் செல்கிறார். கரூரில் முதல்வர் விஜய் 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ செல்கிறார்.

இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் வாயிலாக திருச்சி வந்தடைந்த முதல்வர் விஜய் காரில் கரூர் செல்கிறார்.

திருச்சியில் இருந்து கரூர் நோக்கி தமிழக முதல்வர் விஜய் பயணிக்கவுள்ள முக்கிய சாலை வழியில், கேட்பாரற்ற நிலையில் நீண்ட நேரமாக லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றின் ஓடத்துறை பகுதியில், முதல்வரின் பாதுகாப்பு வழித்தடத்தில் இந்த கனரக லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியில் ஓட்டுநரோ, உதவியாளரோ, உரிமையாளர் தரப்பினரோ யாரும் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த லாரி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. லாரி எப்படி இங்கு வந்தது, ஏன் கைவிடப்பட்ட நிலையில் நிற்கிறது, அதில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதேனும் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

முதல்வரின் பயணத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், அந்த லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு லாரியைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வர் பயணிக்கும் மிக முக்கியமான பாதையில் கேட்பாரற்று லாரி நிறுத்தப்பட்டிருப்பது பாதுகாப்பு வளையத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

லாரியின் உரிமையாளரைத் தொடர்பு கொள்ளும் பணியும், லாரி ஓட்டுநர் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b