Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாதவரம் பிரதான சாலையில் இன்று காலை குடிநீர் குழாய் பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஜேசிபி இயந்திரத்தின் முனை, பூமிக்கடியில் சென்ற கேஸ் குழாயில் மோதியதில் குழாய் உடைந்து கேஸ் வேகமாக வெளியேறியது. சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த தீப்பொறியால் கேஸ் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
காற்றின் வேகத்தால் தீ அருகில் இருந்த பெட்டிக் கடைகளுக்கும் பரவியதால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியும் தீக்கிரையானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 3 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மாதவரம் - மணலி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கேஸ் குழாய் பாதை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் பள்ளம் தோண்டியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து மாதவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b