Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 10 ஜூலை (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே எல்லைமேடு பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வரும் செல்வகுமார் கடந்த ஆறு ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) முறையாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக ஜிஎஸ்டி துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், உரிய பதிலோ அல்லது வரி செலுத்துவதற்கான நடவடிக்கையோ அவர் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் குழு போலீஸ் பாதுகாப்புடன் செல்வகுமாரின் வீட்டிற்கு சென்றது. அப்போது வீடு பூட்டியிருந்ததால், போலீசாரின் முன்னிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி செல்வகுமார் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரி ஏய்ப்பு தொடர்பாக அவரது வீடு மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் முடிவில் நிலுவை வரி மற்றும் அபராதம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b