2-வது ஒருநாள் போட்டி வங்காளதேசத்திற்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே
ஹராரே , 10 ஜூலை (ஹி.ச.) வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வங்காளதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்ற
A


ஹராரே , 10 ஜூலை (ஹி.ச.)

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

வங்காளதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரேவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் பென் கர்ரன் சிறப்பாக விளையாடி 111 ரன்கள் குவித்து சதம் விளாசினார்.

அவருக்கு பிராட் இவான்ஸ் 58 ரன்கள் சேர்த்து நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்க வீரர் தன்சித் ஹசன் தமிம் 57 ரன்களும், தொஹித் ஹ்ரிதோய் 60 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து நுருல் ஹசன் 38 ரன்களும், கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 27 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கத் தவறினர்.

இதனால் வங்காளதேச அணி 48.1 ஓவர்களில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA