கர்நாடகாவில் ஜீப்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- நண்பர்கள் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகா, 10 ஜூலை (ஹி.ச.) கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நண்பர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தார்வாடைச் சேர்ந்த
விபத்து


கர்நாடகா, 10 ஜூலை (ஹி.ச.)

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஜீப் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நண்பர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தார்வாடைச் சேர்ந்த 9 நண்பர்கள் ஆன்மிகத் தலங்களுக்கு சுற்றுலா செல்ல ஜீப்பில் புறப்பட்டனர்.

அவர்கள் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா வழியாக எல்லாபுரா தாலுகா அரபைல்காட் பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது, எதிரே வந்த லாரி ஜீப் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்கள் பசவராஜ் (48), அபிஷேக் ஈஸ்வர் (28), அக்ஷய் (26), அபிஷேக் (26), ஜீப் ஓட்டுநர் சஞ்சீவ் (33), மஞ்சுநாத் சுலகி (32), சச்சின் ஹெப்பள்ளி (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த சிவராஜ் துர்கப்பா மடிவாள் (22) மற்றும் சென்னபசய்யா பசலிங்கய்யா சம்பகாவ் (28) ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பான விசாரணையில், உயிரிழந்த சச்சினைத் தவிர மற்ற அனைவரும் தார்வாடில் உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் ‘டெலிவரி பாய்ஸ்’ ஆக பணியாற்றி வந்ததும், பணிச்சுமையிலிருந்து ஓய்வெடுக்க ஆன்மிகச் சுற்றுலாவுக்கு புறப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சச்சின், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பணியாற்றி வந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியிருந்ததும், நண்பர்களுடன் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P