Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 ஜூலை (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 10) மதியம் 12 மணிக்கு கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், காதப்பாறையில் உள்ள கொங்கு கல்வி அறக்கட்டளையின் அட்லஸ் கலையரங்க வளாகத்தில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காவல்துறையின் வழிகாட்டு
நெறிமுறைகளின்படி, நிகழ்ச்சி முழுவதுமாக அனுமதி பெற்றவர்களுக்கானதாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை என்றும், அவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சிக்காமல், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள நேரலைகள் மூலம் நிகழ்ச்சியைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P