கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு பணி அவசியம்-ஜோதிமணி
கரூர், 10 ஜூலை (ஹி.ச.) கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
எம்.பி ஜோதிமணி


கரூர், 10 ஜூலை (ஹி.ச.)

கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் கண்ணீருக்கு எந்த நிவாரணமும் ஈடாகாது என்றும், அரசு பணி வழங்கப்படுவதால் இழந்த உயிரை மீட்டுத் தர முடியாது என்பதையும் அனைவரும் அறிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் பலர் தங்கள் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர்கள் என்றும், தற்போது பல பெண்கள் தனியாக குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலையும், பல குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் அரசு பணி என்பது இழப்புக்கான ஈடல்ல; மாறாக, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் நம்பிக்கையையும், வாழ்வாதாரப் பாதுகாப்பையும் அளிக்கும் ஆதரவாக இருக்கும் என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மேலும், பணிநியமனங்கள் எந்த விதிமுறைகளையும் மீறாமல், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், நீதிக்கான விசாரணை முறையாக நடைபெற வேண்டியது அவசியம் என்றாலும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான ஆதரவும் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இந்த ஆதரவை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், கருணை மற்றும் மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என்றும், அவர்களின் எதிர்காலத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும் கரூர் எம்.பி. ஜோதிமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P