Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், ஆணவக் கொலைகள், தொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களிலும் ஒருங்கிணைந்து முடிவுகள் எடுக்கப்படும் என்றார். மேலும், பாஜக மறைமுகமாகவோ அல்லது வேறு வடிவிலோ தமிழகத்தில் வலுப்பெற அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
காவிரி நீர் பிரச்சினை குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு காங்கிரஸ், கர்நாடகா காங்கிரஸ் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. இது மாநிலங்களின் உரிமை சார்ந்த பிரச்சினை. தமிழ்நாடு காங்கிரஸ் மீது பழி சுமத்துவதால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்று கூறினார்.
'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தில் 'விடியல்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அரசின் மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தப்படக் கூடாது என்றும், பெயரை மாற்றினாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் போதும் என்றார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் என்றும், காங்கிரஸ் சார்பிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அரசு வேலை வழங்கிய விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்த்த பிறகே கருத்து தெரிவிப்பேன் என்றும் மாணிக்கம் தாகூர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam