Enter your Email Address to subscribe to our newsletters

பாலக்காடு, 10 ஜூலை (ஹி.ச. )
கேரளத்தில் அரசு சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலக்காடு–கோபாலபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் நேற்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கேரளத்தில் அரசு சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘பிரியதர்ஷினி’ திட்டத்தை கடந்த மாதம் 15-ந் தேதி முதல்-மந்திரி வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படுவதால் தனியார் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு, பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இதனை கண்டித்தும், தனியார் பஸ்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாலக்காடு–கோபாலபுரம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்காமல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், இந்த வழித்தடத்தில் தினமும் 10 நிமிட இடைவெளியில் 25-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது பெண்கள் இலவசமாக அரசு பஸ்களில் பயணம் செய்வதால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது.
இதனால் டீசல் செலவு மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA