Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
சென்னை மெரீனா கடற்கரையில் 5-ஆம் கட்ட நீலக்கொடி (Blue Flag) கடற்கரைத் திட்டப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மெரீனா கடற்கரையில் ஏற்கனவே 20 ஏக்கர் பரப்பளவில் இரண்டு பிரிவுகளாக நீலக்கொடி கடற்கரைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 3 மற்றும் 4-ஆம் கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது 5-ஆம் கட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
ஆய்வின் போது, திட்டப்பகுதியில் 650 நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஆணையரிடம் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், கடற்கரையின் பசுமையை அதிகரிக்கவும் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
மெரீனா மட்டுமின்றி, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னை கடற்கரைப் பகுதிகள் தினமும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் மூன்று வேளை சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 152 பேர் பணியாற்றுவதுடன், 9 இயந்திரங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கடற்கரைகளை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொறுப்பு என்றும், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை மணற்பரப்பில் வீசாமல், அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam