மேட்டூர் அருகே நில அளவீட்டின்போது இரு தரப்பினர் மோதல் - குடிசைக்கு தீ வைத்ததால் பரபரப்பு
சேலம், 10 ஜூலை (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குட்டப்பட்டி கிராமம், ஊஞ்சப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (70), தனது குடும்பத்துடன் ஒரு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது உறவினரான சின்னத்தாய் (55), கருப
தீ விபத்து


சேலம், 10 ஜூலை (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குட்டப்பட்டி கிராமம், ஊஞ்சப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (70), தனது குடும்பத்துடன் ஒரு நிலத்தில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது உறவினரான சின்னத்தாய் (55), கருப்பசாமி வசித்து வரும் இடம் உட்பட 54 சென்ட் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும், அதற்கான பட்டா இருப்பதாகவும் கூறி நிலத்தை காலி செய்ய வலியுறுத்தியுள்ளார்.

கருப்பசாமி நிலத்தை காலி செய்யாததால், நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்குமாறு சின்னத்தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் நிலத்தை அளவீடு செய்ய சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது கருப்பசாமி மற்றும் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த பரபரப்பின் போது கருப்பசாமி தரப்பினர் பயன்படுத்தி வந்த குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைவாக அணைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பாதுகாப்பில் வருவாய்த் துறையினர் நிலத்தை அளவீடு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குடிசைக்கு தீ வைத்தது மற்றும் மோதல் தொடர்பாக இரு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam