மயிலாப்பூரில் கிரேன் பழுதால் கடும் போக்குவரத்து நெரிசல் - பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் அவதி
சென்னை, 10 ஜூலை (ஹி.ச.) சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. (R.K.) சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக சென்ற கிரேன் வாகனம் திடீரென பழுதடைந்ததால், அந்தப் பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணிக்காக சென்ற கிரேனின்
கிரேன்


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. (R.K.) சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக சென்ற கிரேன் வாகனம் திடீரென பழுதடைந்ததால், அந்தப் பகுதியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மெட்ரோ ரயில் பணிக்காக சென்ற கிரேனின் ஸ்டியரிங் ராடு உடைந்ததால், வாகனத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆர்.கே. சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், அந்த வழியாக வந்த வாகனங்கள் சாலையின் மறுபுறம் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இருப்பினும், காலை நேர நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நிலையைச் சீர்செய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டு, வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், பழுதடைந்த கிரேனை சரிசெய்து அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கிரேன் அகற்றப்படும் வரை ஆர்.கே. சாலையில் போக்குவரத்து பாதிப்பு நீடிக்கக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P