Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, உயர்கல்வித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
மாநிலத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 125 கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவலை தமிழக அரசும், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முந்தைய திமுக ஆட்சியில் அரசு கல்லூரிகள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகவே இந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தகுதியான ஆசிரியர்கள், தரமான கட்டிடங்கள், நவீன ஆய்வகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததால், மாணவர்கள் அரசு கல்லூரிகளைத் தவிர்த்து, அதிக கட்டணம் இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், உருக்குலைந்து வரும் உயர்கல்வித் துறையை சீரமைப்பதில் முன்னுரிமை அளித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி அரசு கல்லூரிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam