Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில்,
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று உதவியது யார்? செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உயர்சிகிச்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுத்தவர்கள் அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தக் கூட்டத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அசாதாரண சூழலிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸ் வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல் தனது பேச்சைத் தொடர்ந்து நடத்தியது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பலர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றது யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
இறுதியாக, ஓடு... ஓடு... ஓடு... என்று தனது பதிவை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிறைவு செய்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ