Enter your Email Address to subscribe to our newsletters

பல்லடம், 10 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் நாமக்கல் , ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கறிக்கோழி உற்பத்திக்கு பெயர் பெற்ற பல்லடம் பகுதியில், பண்ணை கறிக்கோழியின் கொள்முதல் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவான பி.சி.சி தினமும் நிர்ணயம் செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த விலை, தற்போது கிலோவுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.151 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் இடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த விலை உயர்வு முடிவு செய்யப்பட்டது.
தொடர் மழை காரணமாக கோழிகளின் உற்பத்தி குறைந்துள்ளதும், தீவனங்களின் விலை ஏற்றமும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
விலை உயர்வு காரணமாக சில்லறை விற்பனையிலும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது இறைச்சி பிரியர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், உற்பத்தி செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருந்த பண்ணையாளர்களுக்கு இந்த விலை உயர்வு சற்று ஆறுதல் அளிப்பதாக கூறுகின்றனர்.
அடுத்த கட்ட விலை நிர்ணயக் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
சந்தை நிலவரத்தைப் பொறுத்து விலையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b