பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்த வழக்கில், தந்தை உட்பட 2 பேர் கைது
தேனி, 10 ஜூலை (ஹி.ச.) தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் வேந்தர் பாலா (49). இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் தேனி மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, தற்போது அண்ணாமலையின் இயக்கத்தில் பணியாற்றி வருவதாக கூறப
Theni


தேனி, 10 ஜூலை (ஹி.ச.)

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் வேந்தர் பாலா (49). இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தில் தேனி மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, தற்போது அண்ணாமலையின் இயக்கத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீகாந்த் (20) என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில், பாலா வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, தனது மனைவி மற்றும் மகனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை பாலா - மகன் ஸ்ரீகாந்த் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாலா, தனது மகனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரிடம் சமாதானம் பேச வேண்டும் எனக்கூறி, தேனி அருகே உள்ள வயல்பட்டி பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீகாந்தை, மது போதையில் இருந்த பாலாவின் நண்பர்களான அலெக்ஸ் பாண்டியன், கருப்பசாமி ஆகியோர், துண்டை வைத்து கட்டியுள்ளனர். பின்னர் பாலா தனது மகனை கொடூரமாக கொலை செய்து, பெரியாற்றில் தூக்கி வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஸ்ரீகாந்த் வீட்டுக்கு திரும்பாததால் பயந்து போன தாய் ராஜலட்சுமி, தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், பாலா மீது சந்தேகம் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு குறித்து விசாரணையை தொடங்கிய தேனி சிபிசிஐடி போலீசார், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பாலாவை கைது செய்து, சிபிசிஐடி அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பாலா தனது மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாராம்.

தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். மேலும் இந்த கொலை வழக்கில், தலைமறைவாக உள்ள கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN