Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஊழல் வழக்குகளின் விசாரணை தாமதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கை இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
ஊழலை ஒழிப்பதாக அனைவரும் மைக் முன்பு பேசுகிறார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், குற்றச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்த தேர்தலும் முடிந்துவிட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துவிட்டனர் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ