Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 10 ஜூலை (ஹி.ச.)
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சீரங்கனூரில், பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீரங்கனூர் பகுதியில் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
குறிப்பாக காலை நேரங்களில் பேருந்தில் இடமின்றி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் அவல நிலை தொடர்வதாக வேதனை தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் இன்று காலை சீரங்கனூர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்டு, நங்கவள்ளி - தாரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி கூடுதல் பேருந்துகள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து சீரானது. ஆனால் கோரிக்கை நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b