Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யக் கூடும் என கணித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு, இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் மீனவர்களை எச்சரித்துள்ளது.
வட தமிழக மாவட்டங்களில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்தது.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பணி முடிந்து வீடு திரும்புவோர் சிரமம் அடைந்தனர்.அதேபோல, புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, போரூர், ஐயப்பந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கப்பெருமாள்கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P