கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி, 10 ஜூலை (ஹி.ச.) செங்கோட்டை வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதாவது, தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயல் பகுதியை சேர்ந்த ராஜகோபால்
Tenkasi District Court


தென்காசி, 10 ஜூலை (ஹி.ச.)

செங்கோட்டை வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதாவது, தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயல் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவர் முன்னாள் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று அவரது தலையை துண்டாக வெட்டி, நாகர்கோவில் செல்லும் நான்கு வழி சாலை ஓரமாக அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில், அதே சாலையில் உள்ள கக்கன் நகர் பகுதியில் அவரது தலையை டீசல் ஊற்றி எரித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்த சாமிதுரை, சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன், திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த ராமர், தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துராஜ், வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் ஆகிய 5 பேரையும் கைது செய்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நிறைவு பெற்று குற்றவாளிகளான 5 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 7 வருட ஆயுள் தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தென்காசி அமர்வு நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN