Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 10 ஜூலை (ஹி.ச.)
தேனி அருகே அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பையா. இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையா தனது 15 வயது இரட்டை சிறுமிகளின் ஆதார் கார்டில், தங்களது கை ரேகை, மற்றும் கருவிழி பதிய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் இரட்டை சிறுமிகள், தங்களது பள்ளியில் அரசு உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் கார்டு, கைரேகை, மற்றும் கருவிழிப் பதிவு செய்வதற்காக இ சேவை மையம் சென்றுள்ளனர். ஆனால் ஆதார் சேவை இணையதளத்தில் கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்ய முடியாமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஆதார் அட்டை குளறுபடியை சரி செய்ய தபால் அலுவலகம், மதுரை ஆதார் சேவை மைய அலுவலகத்தை அணுகிய போதும் இதே நிலை நீடித்துள்ளது. அங்கு சிறுமிகளின் கருவிழி மற்றும் கைரேகை ஒன்று போல் இருப்பதால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பெங்களூருவிவ் உள்ள ஆதார் மைய அலுவலகத்திற்கு செல்லுங்கள் என அறிவுறுத்தியதாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள தங்களால் பெங்களூரு சென்று ஆதார் பிரச்சனையை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; இதனால் தங்களுக்கு பள்ளியில் கல்வி உதவித்தொகை பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் தங்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆதார் கார்டில் தங்களது கைரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரட்டை சகோதரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இந்திய தனித்துவ அடையாள எண் எனப்படும் ஆதார் எண் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. தற்போது வங்கி சேவையில் தொடங்கி குடும்ப அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார் நம்பர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலருக்கு ஆதார் அட்டையில் அவர்களது விவரங்கள் தவறுதலாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN